“தரமான விதைகளை தேர்வு செய்த தொழில்நுட்பமா?” – முளைப்பாரி..!
எந்த ஓரு நாடும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் ஏர்முனையும், போர் முனையும் வலிமையோடு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
அந்த வகையில் சங்க காலம் முதற்கொண்டு விவசாயத்தில் பல யுக்திகளை தமிழர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மேலும் உழவுத் தொழிலுக்கு என்று அன்றே பல கருவிகளை பயன்படுத்திய பெருமை தமிழர்களுக்கு உண்டு.
அந்த வகையில் விவசாயிகள் ஆடி பட்டம் தேடிப்பார்த்து, விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல் தகுந்த நேரத்தில் அறுவடையும் செய்திருக்கிறார்கள். அப்படி அறுவடை செய்த பிறகு, தரமான விதைகளை தங்களுடைய நிலத்திலேயே தேர்வு செய்ய தமிழர்கள் கையாண்ட தொழில்நுட்பம் தான் இந்த முளைப்பாரி தொழில்நுட்பம் ஆகும்.
மேலும் இந்த முளைபாரியை வைத்து கிராம தேவதைகளை வழிபடுவது, இன்றும் வழக்கத்தில் உள்ளது. இவ்வாறு செய்வதின் மூலம் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இன்று வரை நிலவி வருகிறது.
மேலும் விவசாயிகள் விதைகளை தேர்வு செய்வதில் பலவிதமான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து இருக்கிறார்கள். குறிப்பாக நோய் தாக்கல் இல்லாத தரமான பயிர்களில் இருந்து நன்றாக விளைந்த விதைகளை எடுத்து அவர்கள் வீட்டில் உள்ள குதிர்களிலும், சணல் அல்லது துணிகளில் கொட்டி கட்டி பாதுகாத்து வருவார்கள்.
அவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரும் விதைகளில் பூச்சிகளின் தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் வெயிலில் காய வைத்து அதனோடு வேம்பு, மஞ்சள், நொச்சி, வசம்பு போன்ற மூலிகைகளை இடித்து போட்டு கலந்து வைப்பார்கள்.
அப்படி பாதுகாக்கப்பட்ட அந்த விதைகளை தான் தமிழர்கள் அதன் முளைப்புத் திறனை பரிசோதனை செய்து பார்க்க முளைப்பாரி திருவிழாவை கிராமங்கள் தோறும் நடத்தினர்.
அதுமட்டுமல்லாமல் முக்கியமான சடங்குகளிலும் இந்த முளைப்பாரி வைக்கும் வழக்கம் உள்ளது. குறிப்பாக திருமணம், உபநயனம், ஆலய கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளில் மண்ணால் ஆன ஐந்து கிண்ணங்களில் மண்ணினை போட்டு, அதில் நவதானியங்களை தூவி, நீரினை தெளித்து விடுவார்கள்.
இதன் மூலம் அந்த விதைகள் நல்ல முறையில் முளைத்து வந்தால் அதே விதைகளை பயன்படுத்தி அவர்களது நிலத்திலும் விவசாயம் செய்ய அற்புதமான யுக்தியை கையாண்டிருக்கிறார்கள். இன்றும் இந்த நிகழ்வானது மிகப் பெரிய திருவிழாவாக கிராமங்கள் தோறும் நடைபெற்று வருகிறது.
இப்போது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் தமிழரின் சம்பிரதாயங்களில், அறிவியல் உண்மைகள் எப்படி இலை மறைவு, காய் மறைவாக பகிரப்பட்டுள்ளது என்று.