• May 10, 2024

“விண்ணைத் தொட்டிடலாம்..!” – தன்னம்பிக்கை பெண்ணே வா வெளியே…

 “விண்ணைத் தொட்டிடலாம்..!” – தன்னம்பிக்கை பெண்ணே வா வெளியே…

Self-confidence

பெண்னே உன்னை விண்ணளவு உயர்த்தும் சாவி தான் தன்னம்பிக்கை. பேராற்றல் மிக்க ஒரு இனம் உண்டு என்றால் அது பெண் இனம் தான் என்பதை புரிந்து கொள். பெண்னே இது தான்  உன் பாதை… இது தான் உன் பயணம் என முடிவு செய்து விட்டால் நீ உன் மனதோடு  உறவாடு, பின் உன் கனவோடு உறவாடு.


அவ்வாறு உறவாடும் போது தான் உனக்கு ஏற்படும் சிரமங்கள் உன்னை விட்டு ஓடும். நீ உறவாடிக் கொண்டு போனால்  சிறிது தூரத்தில் தெரியும், ஒளிமயமான காலம் விரைவில் உன் காலடியில்…. பெண்னே.

Self-confidence
Self-confidence

கரணம் தப்பினால் மரணம் என நீ அஞ்சவேண்டாம்.  முன்னேறு! முன்னேறு எனும் வார்த்தைகள் உன்னை உற்சாகம் செய்யும், உற்சாகத்தை அள்ளித்தரும். நீ  உனக்கு போடப்பட்ட இரும்பு சங்கிலிகளை,  இலவம் பஞ்சாய் மாற்றக்கூடிய திறன் படைத்தவள் நீ என்பதை உணர்ந்து கொள்.


உன் சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் தூர எறிந்துவிடு. சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், விடாமுயற்சியும் உன் கனவை நினைவாகி தடைகளை தவிடு பொடியாக்கும். அச்சத்தை அழித்துவிடு பெண்னே… ஆர்வத்தை அதிகப்படுத்து. ஏன், எதற்கு என பலவித கேள்விகளை கேள். விடைகளைத் தேடி விடியும் வரை போராடு. கலாம் சொன்னது போல் உறக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

எட்ட முடியாத உயரத்தை  எட்டிப்பிடிக்கும் ஏணியாய் கூட நீ பலருக்கு உதவி செய்யலாம். உன்னால் நிச்சயம் முடியும் எனும் நம்பிக்கை  உனக்குள் எப்போதும் இருக்கவேண்டும். 

உன்  நம்பிக்கையை செயல்படுத்த திட்டமிடுவதும் அதை நிறைவேற்ற முயற்சி செய்யும் போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல் விடாமுயற்சியுடன் அந்த காரியத்தை சாதிக்கும் திசையை நோக்கி முன்னேறுவது தான் முக்கியம். அப்போது தான் “முயற்சி திருவினையாக்கும்”. “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” எனும் வாசகங்கள் எல்லாம் மெய்யாகும்.

நீ எதையும் வெல்ல வேண்டுமென்றால் “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு”  காத்திருத்தல் வேண்டும். காத்திருத்தல் என்பது சுலபமான ஒன்றல்ல.நீ மந்த நிலையில் இருந்து விடக்கூடாது. விரைந்து, தெளிவாகவும், தன்னம்பிக்கையோடும் செயல்பட வேண்டும். யாராக இருந்தாலும் தன் வலிமையை அறிந்து அதற்கு ஏற்றது போல் உறுதியாக செயல்படு. இதைத்தான் “தன் பலம் அறிந்து அம்பலம் ஏற வேண்டும்” என முன்னோர்கள் கூறினார்கள்.


Self-confidence
Self-confidence

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும்” எனும் கண்ணதாசனின் வரிகளை எண்ணிப் பார்க்கும்போது நீ வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பதை அனுபவப்பூர்வமாக கற்றுக் கொள்ளும்போது தான் எதிர்நீச்சல் அடித்து வெற்றி அடைய முடியும்.

உள்ளத்தில் உரம் இருந்தால் மட்டுமே நீ எதையும் வெல்ல முடியும். “சாவுக்கே சவால்” எனும் நாவலை எழுதியவருக்கு  இரண்டு கைகளும் இல்லை. பற்களால் பேனாவை பிடித்து இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். கால் விரல்களைப் பிடித்து எழுதுவதைவிட கடுமையானது உதடுகளில் பேனாவைப் பிடித்து எழுதுவது. எண்ணற்ற மொழிகளில் அச்சேறிய இந்த நாவல்  தன்னம்பிக்கைகாரர்களுக்கு ஒரு நல்ல உதாரணம்.

நீ எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் உங்கள் இலக்குகளை நோக்கி பயணம் செய்வதில் குறிக்கோளாக இருங்கள்.பெண்கள் எப்போதும் எவரையும் எதிர்பார்த்து வாழக் கூடாது. எவருக்கும் நாம் பாரமாகவும் வாழக்கூடாது.


நமக்கு கிடைத்தது போதும் என்ற வாழ்க்கையே சிறப்பானது.வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக உழைக்கவேண்டும்.அப்படி செய்தால் வெற்றியை தடுக்க யாராலும் முடியாது.