• October 12, 2024

பெரியக்கோயிலை கட்டியது ராஜராஜ சோழன் என்று எப்படி கண்டுப் பிடித்தார்கள்?

 பெரியக்கோயிலை கட்டியது ராஜராஜ சோழன் என்று எப்படி கண்டுப் பிடித்தார்கள்?

இயற்கைக்கு மீறிய ஒன்றை, மனித சக்திக்கு மீறிய ஒன்றை, ஒரு மனிதன் பார்க்கும் பொழுது அதை பார்த்து வியந்து போவது மட்டும் இல்லாமல், அவனது கற்பனை ஓட்டத்தை ஓட விட்டு, அதில் பல எண்ணங்களை புகுத்தி, அதை மெருகூட்டுவதாக எண்ணி பல தகவல்களை சேர்ப்பதால், அதன் உண்மைத் தன்மை இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும்.

சில சமயம், உண்மையான பிரம்மாண்டமே நமக்கு பொய் போல காட்சியளிக்கும். ஆக, ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலை பார்க்கும் எவருக்கும், கடந்த கால வரலாறு குறித்த கற்பனை எண்ணங்கள், இரக்கை கட்டிக்கொண்டு பறக்கும்.

அதன் விளைவாக, வரலாற்றை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும் கதைகள் முளைவிட்டு விடக்கூடாது. உலகிலேயே கோயில் கட்டும் துறையில், சிறந்து விளங்கிய ஓர் இனம் என்றால், அதில் உயர்ந்து விளங்கிய ஓர் இனம் என்றால், அது தமிழினம்தான் என்றும் இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட கோவில்களிலேயே மிகப்பெரியது தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில்தான் என்றும், Britannia தகவல் களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ளது.

பார்க்க பார்க்க, படிக்க படிக்க, எந்த ஒரு நேரத்திலும் நமக்கு சோர்வே இல்லாமல், கேட்டதை மீண்டும் மீண்டும் கேட்டாலும், கேக்கும் நிமிடத்தில் எல்லாம், உணர்ச்சி பொங்கு வைப்பதும், ஆச்சரியப்பட வைத்து, வியப்பில் ஆழ்த்துவதுதான் தஞ்சையில் உள்ள, பெருவுடையார் கோவில்.

காலமும், கற்பனையும், எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதற்கு இந்த கோவிலே ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீரத்தமிழன் ராஜ ராஜ சோழன், அரும்பாடுபட்டு இந்த கோவிலை கட்டியதன் வரலாறு, 125 ஆண்டுகளுக்கு முன்புதான், நமக்கு தெரிந்தது. ஆம், ராஜராஜ சோழன் கட்டிய இந்தக் கோவில் யார் கட்டினார்கள் என்பது, மிகப் பெரிய கேள்வியாக, அந்த காலத்தில் இருந்தது.

image: haribhakt.com

ஏனென்றால், ராஜ ராஜ சோழனுக்குப் பின்பு, பல வருடங்கள் கழித்து சோழர் ஆட்சி நலிவடைந்த பின்பு அச்சமயத்தில் ஏற்பட்ட பல ஆட்சி மாற்றங்கள், தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது யார்? என்ற அடையாளத்தையும் அழித்து விட்டுச் சென்றது.

இதனால், 125 ஆண்டுகளுக்கு முன் வரை, தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியது யார்? என்பது ஒருவருக்கும் தெரியாமல் போனது. ஆனால், இந்த ரகசியத்தை உலகத்திற்கு கொண்டு வந்தது ஒரு தமிழன் அல்ல. ஒரு ஆங்கிலேயன்.

காடுவெட்டி சோழன் என்பவன்தான், இந்த கோவிலை கட்டியதாக, GU Pope அவர்கள் எழுதியிருந்தார். ஆனால், 1886 ஆண்டில், அப்பொழுது இருந்த ஆங்கிலேய அரசு German நாட்டு அறிஞரான Hels என்பவரை கல்வெட்டு ஆராய்ச்சியாளராக நியமித்தது. அவர்தான், தஞ்சை பெருவுடையார் கோவிலை பற்றி பல நாட்கள் ஆராய்ச்சி செய்து இந்த மாபெரும் அதிசயத்தை, தமிழர்களின் இந்த வரலாற்று சின்னத்தை கட்டியது ஒரு தமிழன் என்றும், அவர்தான் ராஜராஜ சோழன் என்று இந்த உலகிற்கு கூறினார்.

வரலாற்றுக் குறிப்புகள், கால வெள்ளத்தில், அடித்துச் செல்லப்பட்டு விடலாம், அல்லது, திசைமாறி சென்று விடலாம் என்று முன் யோசனையாக திட்டமிட்ட ராஜராஜன், தஞ்சை பெருவுடையார் கோவில் தொடர்பான, அனைத்து தகவல்களையும், ஆவணப்படுத்தும் விதமாக, கோவிலில் கல்வெட்டாக எழுதி வைத்திருக்கிறார்.

அந்த கல்வெட்டுகள்தான், கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட வல்லுநர்கள் யார்? யார்? என்று நமக்கு அடையாளம் காட்டுகின்றன. வியக்க வைக்கும், பல தகவல்களின், பல அரிய செய்திகளும், அங்குதான், பொதிந்து கிடக்கின்றன.