• October 7, 2024

அப்பா – என்றுமே ஆச்சரியத்தின் அப்பப்பா தான்!

 அப்பா – என்றுமே ஆச்சரியத்தின் அப்பப்பா தான்!

சிறு வயதில்..
குறும்புகள், தவறுகள் செய்யும் போதெல்லாம், “இப்படியெல்லாம் செய்தால் பூதம் பிடித்து விடுமென்று” பலர் என்னை அதட்டியதுண்டு…! அன்றெல்லாம் என் அப்பாவின் விரல்களைப் பற்றிக் கொண்டு “எங்கே அந்த பூதங்களை வரச்சொல்லுங்கள்” என்று தைரியமாக நான் சொல்லியதுண்டு..!!

அதிகம் பேசாத ஒரு அழகான உறவு அப்பா!

‘நிமிர்ந்த நெஞ்சும், நெருப்பு போன்ற பார்வையும் பாரதிக்கு தான் உண்டு’ என்று யார் சொன்னால், நம் அப்பாவுக்கும் உண்டு. ஒரு கண்ணில் கோபம் வந்தாலும், மறு கண்ணில் ஈரம் நின்றாலும், ஓர் புன்னகையால் நம்மை அள்ளி அணைப்பவர் அப்பா!

அம்மா கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கியவர் அப்பா!
அதிகம் பேசாத ஒரு அழகான உறவு அப்பா!
நான் காணாத யாவும் என் மகன்/ என் மகள் காண வேண்டும் என்று நினைப்பவர் அப்பா!

‘தனக்கென்று எதுவும் வேண்டாம் பிள்ளைக்கு குடு’ என்று சொல்பவர் அப்பா!
அவர் சாப்பிடும் முன்பு பிள்ளைகள் சாப்பிட்டு விட்டார்களா என்று கேட்பவரும் அப்பா!
என் பிள்ளை நடக்கிறான்! என்று வட்டிக்கு பணம் வாங்கி, வண்டி வாங்கி தந்தவர் அப்பா!

என் கண்ணீரை கண்டு என் மகன் கலங்கி விட கூடாது என்று, கஷ்டங்களை கடலில் கரைத்தவர் அப்பா!
தன் மகனின் வெற்றியை, பெருமையாக மிட்டாய் குடுத்து, தான் சாதித்தது போல் கொண்டாடுபவர் அப்பா!
சுமைகளை சுகமென சுமக்கும் சுயநலமற்ற ஓர் ஜீவன் அப்பா!

வாழ்வில் தான் கற்ற பாடங்களை, பாசத்தோடு சொல்லிதரும் ஆசான் அப்பா!
வாழ்க்கை எனும் பயணத்தில், நம்மை நல்வழியில் நகர்த்தி செல்லும் நாணயமான நண்பன், அப்பா!
நம் ஆசைகளை, அவர் ஆசைகளாய் கொள்பவர் அப்பா!
யார் நம் முன்னே இருந்தாலும், என்றும் நம் பின்னே இருந்து, நம்மை இயக்குவது அப்பா!

தடுமாறும் போதெல்லாம், தாங்கிக் கொள்பவரும் அப்பா தான்!
தடம் மாறும் போதெல்லாம், ஏந்திக் கொண்டு செல்பவரும் அப்பா தான்!!

தன்மானம் உள்ள நம் தந்தை, பிறர் காலை என்றும் பிடித்து பணிவதில்லை! ஆனால் தன் மகனுக்கு இழுக்கு என்றால், பிறர் கால் பிடிக்க அவர் தயங்குவதில்லை!!

ஒரு தந்தை எப்படி நம்மை சிறு வயதில் பார்த்துகொள்வரோ, அதே போல் அவரின் கடைசி காலத்தில் நாம் அவரை பார்த்துக்கொள்வதே, ஒரு தந்தைக்கு நாம் செலுத்தும் நன்றியும், நம் கடமையும்.

“எல்லாம் சரியாப் போகும்
நான் இருக்கேன்
நல்லதே நடக்கும்
உடம்பைப் பார்த்துக்கொள்
உன் மேலே நம்பிக்கை இருக்கு, நீ நல்லா வருவே!
பிள்ளையையும் மனைவியையும் நல்லா பார்த்துக்கொள்” – இதெல்லாம் தந்தை நம்மிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், இந்த வார்த்தைகள் தரும் தன்னம்பிக்கையை வேறு எது தரும்?

கடவுள் உயரே இருக்கிறார் என்றால், பூமியில் தந்தை இருக்கிறார்! காலம் ஒரு நீண்ட திரைப்படம் போல.
அதில் வாழும் அப்பாக்கள் அதில் கதாநாயகர்கள் மட்டும் அல்ல, முழுக் கதையும் அவர்களே…!!

அப்பா என்றுமே ஆச்சரியத்தின் அப்பப்பா தான்!!

இந்த பதிவை வீடியோவாக பார்க்க..