அகநானூரில் பாடப்பட்ட “யானை மலை” இதுதானா? – அட இவ்வளவு சிறப்புகள் உள்ளதா?
தூங்கா நகரான மதுரையைச் சுற்றி வரலாற்றுச் சின்னங்களுக்கு பஞ்சம் இல்லை என்று கூறலாம். அந்த வகையில் அகநானூறு மற்றும் கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களால் நூல்களில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் யானைமலை பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்க உள்ளோம்.
இந்த யானை மலையை “பிளிரா யானை” என்று அனைவரும் அழைக்கிறார்கள். சுமார் 4000 மீட்டர் நீளமும், 1200 மீட்டர் அகலமும் கொண்ட நானூறு மீட்டர் உயரமான மலையாக இது விளங்குகிறது. இந்த மலையானது சங்கம் வளர்த்து தமிழுக்குப் பெருமை சேர்த்த மதுரை மாநகரில் அமைந்துள்ளது.
மதுரையைச் சுற்றி இருக்கின்ற பசுமலை, திருப்பரங்குன்றம் மலை, நாகமலை, யானைமலை இவற்றின் மத்தியில் யானை மலைக்கு என்று சிறப்புக்கள் உள்ளது. இது ஒரு சிறிய குன்று போல் தான் காணப்படுகிறது. எனினும் 3 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றோடு தொடர்புடைய முக்கியமான மலையாக கருதப்படுகிறது.
இந்த மலையானது மதுரைக்கு அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியில் இருந்து பார்த்தாலே மிக நன்றாக தெரியும். யானை மலை என்று பெயர் வருவதற்கு காரணம் ஒரு ஒற்றை யானை படுத்திருப்பது போல் இந்த மலை தோன்றுவதால் தான் இந்தப் பெயர் பெற்றது. மதுரையிலிருந்து திருச்சி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்த ஒத்தக்கடை அமைந்துள்ளது.
சுற்றுலா பயணிகளை அதிகளவு கவரக்கூடிய இந்த மலைக்கு அடிக்கடி சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. சிலர் இந்த மலையின் பின்னழகை படம் பிடித்து செல்வதோடு இங்கிருக்கக்கூடிய விஷயங்களை ஆச்சரியமாக பார்ப்பார்கள்.
இந்த யானை மலையை பொறுத்த வரை ஒத்தக்கடை, கொடிக்குளம், மலை சாமிபுரம், உலகனேரி, உத்தங்குடி, புது தாமரைப்பட்டி உள்ளிட்ட ஐம்பதற்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையது.
இந்த மலையில் சுமார் எட்டாம் நூற்றாண்டில் குடைந்து கட்டப்பட்ட முருகன் கோயில் மிக நேர்த்தியான முறையில் உள்ளது. அது போல் ஒன்பதாம் நூற்றாண்டில் சமணர்கள் இங்கு வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகிறது. குறிப்பாக சமண படுக்கைகள் கல்வெட்டுக்கள் அதிகளவு உள்ளது.
இதனை அடுத்து யானை மலையை 2010 ஆம் ஆண்டில் சிற்பக்கலை நகரமாக மாற்ற நமது தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கக் கூடிய இந்த யானை மலையில் திரைப்படப் படப்பிடிப்புகளும் தற்போது நடைபெற்ற வருகிறது.
எனவே யானை மலைப்பகுதியில் வரலாற்று சிறப்புகளை உணர்ந்து அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் முதல் சமணர்கள் வந்து தங்கிச் சென்ற இந்த பகுதியில் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகிறது.
இந்த யானை மலையின் படுக்கைக்கு மேல் பகுதிக்கு செல்ல முறையான பாதைகள் ஏதும் இல்லை. விவரம் தெரிந்தவர்கள் மூலம் மட்டுமே மேலே சென்று பார்க்க முடியும். சுற்றுலா பயணிகளை ஆர்வத்தோடு ஈர்க்கின்ற இந்த யானைமலை பகுதியை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் நாம் வரலாற்று சின்னமாக அங்கீகரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.