• October 12, 2024

உயிர்களின் அரசாட்சி – அதிகாரம் இல்லாத “அரச ஆட்சி”

 உயிர்களின் அரசாட்சி – அதிகாரம் இல்லாத “அரச ஆட்சி”

அழகாய் ஓர் அரசமரம்
பிரதான சாலையோரம்
சற்றே பத்தடி தூரம்
அங்கே ஓர் பேருந்துநிறுத்தம்

பேருந்திற்காய்
காத்திருக்கும்வரை
பயணிகளுக்கெல்லாம்
மரமே நிழற்குடை

வீசும்காற்றை
தலையால்தடுத்து
இலையால் துடைத்து
வடிகட்டித் தரும்
விதம்நின்றது
அந்த அற்புத மரம்

மரத்தினடியில் ஓர்
நீண்ட சாய்வு நாற்காலி
வழிப் போக்கன் யாரும்
போவான் இளைப்பாறி

மரக்கிளையின் உச்சியிலே
கண்டதோர் காட்சியிலே
மனமந்த மரமாய் மாற
ஏங்கியது அந்தநொடியிலே

அடர்ந்திருந்த ஓர் கிளைமேல்
படர்ந்திருந்த பறவையின் கூடு
பார்க்க பார்க்க கண்களுக்குள்
பதிந்தது பரவசத்தோடு

தாய் பறவை ஏதோ
பாடம் சொல்ல
சேய் குஞ்சுகளும்
கீச்சி கீச்சி பதில் சொல்ல

விரைந்து வீசிய காற்றங்கே
வித விதமாய் தாலாட்டியதே
கிளைகளோடு இலைகளும்
இதமாய் தலையாட்டியதே

தனிமரம் என்றாலும்
பொதுநலம் பொதிந்ததே
சுயநலமில்லாமல்
சுகமெலாம் தந்ததே

மாநகரிலும் இந்த
மரத்தின் காட்சி
அழகிய கண்காட்சி

மாநகர் பேருந்து நகர
மரத்திற்குள்ளே
மனசும் பறிபோச்சி

சாலையோர மரங்கள்
எல்லாம் ரசிக்க மறந்த
ரகசிய பொருட்காட்சி

பொருட்காட்சி என்றே
சொல்வது தவறு அவையே
உயிர்களின் அரசாட்சி
அதிகாரம் இல்லாத அரச ஆட்சி

கவிஞர் சென்

கவிஞர் சென்