பதக்கங்களை தவற விட்டவர்களுக்கு Altroz கார் !!!

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மத்திய மாநில அரசுகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் சலுகைகளையும், பரிசுத் தொகைகளையும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் வெண்கலப் பதக்கங்களை தவறவிட்ட வீரர்களுக்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் Altroz காரை ஊக்கப் பரிசாக அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களுக்கும், இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் சந்தோஷம் அளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது. பொதுவாக வெற்றி பெறுபவர்களுக்கு தான் பரிசுத் தொகையும், சலுகைகளும் அறிவிக்கப்படும். ஆனால் வெற்றிக்கு அருகில் சென்று சாதிக்க முடியாமல் போன வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்து டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களை ஊக்குவித்துள்ளது.
இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம், “இந்த வீரர்கள் பதக்கங்களை தவற விட்டிருக்கலாம், ஆனால் பல லட்சம் இதயங்களை தங்களது கடின உழைப்பால் வென்றுள்ளனர். அவர்களை கௌரவிக்க வேண்டியது எங்கள் நிறுவனத்தின் கடமை “, என கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து டாட்டா குழுமத்தின் சேர்மன் ரதன் டாடாவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். “ஊக்குவிக்க ஒருவன் இருந்தால், ஊக்கு விற்பவன் தேக்கு விற்பான்”, என கவிஞர் வாலி கூறியதுபோல, நாட்டிற்கு பெருமை தேடி தர முயன்ற வீரர்களை ஊக்குவித்த உன்னத மனிதராய் ரதன் டாடா உருவெடுத்துள்ளார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த உன்னத செயலால் அந்த நிறுவனத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையும், மரியாதையும் மேலும் ஒருபடி அதிகரித்துள்ளது. Deep Talks தமிழ் சார்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும், ரதன் டாடா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.